மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
வீணா சிரோன்மணி S. ராம்மூர்த்தி அய்யர்
காராவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸாஸ்மராமி
இக் கலி காலத்தில் பரம்பொருளின் கருணையைப் பெறுதல் வெகு சுலபம். அவன் கருணை நம் கஷ்டங்களைப் போக்கும். நன்மைகளை உண்டாக்கும். எடுத்த காரியம் யாவினும் வெற்றி தரும். அக் கருணையே நமக்கு துணை. இத்தகைய கருணையை எளிதில் பெறுவதற்கு வழி, ஆண்டவனை அடிபணிந்து சொல் மலர் கொண்டு அவன்பால் பாமாலை கட்டி அணிவித்து, நெஞ்சம் நெகிழ்ந்து, உடல் புலகித்து பிரார்த்தனை செய்வதேயாகும் . அந்த முறையில் பில்வமங்கள் இயற்றிய “ ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதத்தை” படித்து சுவைத்து பிராத்தனை செய்தால் ஸ்ரீ கோவிந்தன் அருள் கிட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.
“ஜந்தூனாம் நரஜன்ம துர்லபமிதம்” [அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது] உலகில் அருமையும், பெருமையும் வாய்ந்தது மானிடப் பிறவி. அதனை நாம் புண்யப்பயனாய் அடைந்துள்ளோம். இதனைக் கொண்டு நாம் மிகவும் மேலான ஒரு நிலையை அடைந்து இன்புற வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வொப்பில்லாத இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, நாம் வாழ்க்கையாகிய யாத்திரையை நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.
இந்த நம் யாத்திரை இரண்டு வகைப்படும். ஒன்று உடலோம்பும் கொள்கையது; மற்றொன்று உயிரோம்பும் கொள்கையது. இவற்றையே முறையே ’லௌகிகம், வைதீகம்’ என்று சான்றோர் கூறுவர். அறிந்தோ அறியாமலோ மேல் குறித்த இருவகைப் பயணத்தையும் நாம் ஒருமிக்க நடத்திச் செல்கின்றோம். பொதுவாய்க் கூறுமிடத்து எந்த வழிப் பிராயணிக்கும் இடையிலே தாகம் உண்டாகாமலிராது. தாகம் அடைந்தவன் நீர் நிலைகளை அடைந்து பருகியே தாகம் தணிந்து சுகம் அடைகின்றான்.
அது போலவே வாழ்க்கைப் பிராயணத்தில் நேரிடும் துயரம் என்ற தாகத்தை கலைவதற்காக, நீர் நிலைகளைப் போன்று குளிர்ந்த தன்மை பொருந்திய, எங்கும் வியாபித்துள்ள அருட் கடலாகிய ஆண்டவனை நாம் தஞ்சம் அடைகின்றோம். அவரை தஞ்சம் அடைந்தால் பரமானந்த சுகத்தை அனுபவிக்கலாம். அவ்வாறு எளிதில் ஆண்டவனை அடைவதற்காக ஸ்ரீ லீலாசுகர் செய்த “க்ருஷ்ண கர்ணாம்ருதம்” போன்ற பல பாமாலைகள் நமக்கு மிகவும் உதவி புரிகின்றன.
ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதத்தைச் செய்தவர் பில்வமங்கள். இந்த காவ்யத்தைப் படித்து சுவைத்த பெரியோர்கள் இவருக்கு லீலாசுகர் என்ற பட்டம் சூட்டினார்கள். இவர் ஸ்ரீமத் பாகவதம் செய்த சமமானவர் என்பதனாலும், இந்நூல் பாகவதத்திற்குச் சமமானது என்பதாலும் இவருக்கு இந்தப் பெயர் மிகவும் பொருத்தம் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். தேவர்களுக்கு சமுத்திரத்தில் இருந்து அம்ருதம் கிடைத்ததுபோல் நமக்கு இந்த “கர்ணாம்ருதம்” கிடைத்திருக்கின்றது.
வடக்கே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பில்வமங்கள் என்ற ஒரு சிறந்த கவி இருந்தார். அவர் நல்ல ரூபமுள்ளவர். நல்ல உடல் வலிமை வாய்ந்தவர். அவர் கேவலம் அர்த்த காமவசராய், காமக்ரோத, லோப, மோஹ, மத மாத்சர்யங்களாகிற ஆத்ம வைரிகளால் தாக்கப்பட்டு தவித்தார். ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதி தைவங்களாகிற தாபத்ரய ஸாகரத்தில் மூழ்கி “வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாதது போல” அவற்றையே தமக்கு பேரின்பமாக எண்ணி, பிறவிக்குருடனை புண்டரீகாக்ஷனாக ஸ்தோத்ரம் செய்து, கவி பாடி, பொருளீட்டி காலம் கழித்து வந்தார்.
அப்பொழுது அவ்வூரில் சிந்தாமணி என்று ஓர் தாஸி இருந்தாள். ’விலை மாதர்களின் சுழல் விழிகளில் கலை கொஞ்சும்’ என்பது பழமொழி. அவள் நல்ல அழகி. ஆகையால் அவளது அழகில் மயங்கி, அவளுடைய சுழல் விழிகளில் மாட்டிக்கொண்டார் பில்வமங்கள். மானிடப் பிறவியின் உயர் நோக்கங்களின்படி வாழாது, சிற்றின்பத்திலேயே மூழ்கி, தான் ஈட்டிய பொருளனைத்தையும் அவளிடம் கொடுத்து சிற்றின்பச் சுழலில் சுழன்றார்.
ஒரு நாள் பில்வமங்களின் தந்தையாருடைய சிரார்த்த தினம். அன்று அவர் தன் கடமையை சிரத்தையுடன் ஒழுங்காக செய்யாமல், அன்று அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களையும் அனுஷ்டிக்காமல் உடனே தாஸியின் பிரிவை தாங்கமாட்டாது, அவள் வீடு நோக்கிச் சென்றார்.
கருணையுள்ளம் கொண்ட கடவுள், பில்வமங்களை அந்த தாசி மூலம் திருத்தி, நல்வழிப்படுத்த திருவுள்ளம் கொண்டார்.
தாஸியின் வீடு தாளிடப்பட்டிருந்தது. பில்வமங்கள் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. தாஸியின் பிரிவைப் பொருக்காத பில்வமங்கள் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று இன்பம் அனுபவிக்க விரும்பினார்.
வேதம் கூறும் தர்மத்தையோ, புராணம் கூறும் தர்மத்தையோ கேளாத சிலர், அதே தர்மத்தை “காந்தை” சொன்னால் கேட்பார்கள் என்பதால், பல பெண்மணிகள் தங்கள் இன்பமயமான வார்த்தைகளினால் கணவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது பலர் கண்ட உண்மை.
அதைப்போல் ஸர்வேச்வரனின் விருப்பப்படி சிந்தாமணியும், தன்னிடம் அன்புகொண்ட பில்வமங்களை நல்வழிப்படுத்த முயன்றாள்.
உடனே இனிமையான வார்த்தைகளால் பல தர்மங்களை அவருக்கு உபதேசித்தாள். மேலும் பின் வருமாறு கூறினாள்.
“இப்படி (என் மேல்) இந்த மாமிச மயமான அழியக்கூடிய உடம்பின் மேல் வைத்திருக்கக்கூடிய அளவற்ற அன்பின் ஒரு சிறுபகுதியை, கருணைக்கடலான பேரானந்த ஸ்வரூபியான ஈஸ்வரனிடம் செலுத்தினால் இம்மை மறுமை இரண்டிற்கும் பயன் ஏற்படுமே! அவ்வாறு தாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்” என்றனள்.
அவள் வாயிலிருந்து வெளிவரும் எந்த சொல்லையும் வேத வாக்காக கருதுபவன், அவள் கூறும் எந்தச் செயலையும் தன் தலையைக் கொடுத்தாவது நிறைவேற்றி வந்த நீண்டகால பழக்கத்தினால் இதையும் நிறைவேற்ற முன்வந்து, அவ்வூரிலுள்ள ’ஸோமகிரி’ என்ற மகாத்மாவை நோக்கி விரைந்து சென்று அவரை வணங்கித் தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். குரு கடாக்ஷம் எதைத்தான் செய்யாது!
’குரு’ என்ற பதத்திற்கு அக்ஞானத்தைப் போக்குபவர் என்பது தானே பொருள். ஸ்ரீ ஸோமகிரி கருணை உள்ளம் கொண்டவர். ஆகையால் உடனே தன் சிஷ்யருக்கு ஸ்ரீ பாலகோபால மஹா மந்தரத்தை உபதேசித்தார்.
அந்த மந்த்ர உபதேச மஹிமையினால் பில்வமங்களின் அக்ஞானம் நீங்கியது. கண்ணனின் அருள் கிட்டியது. அதனால் அவர் அனவரதமும் கிருஷ்ணனை தியானம் செய்து கிருஷ்ணப்ரேமியாகி விட்டார். பிறகு சுகப்ரம்மத்தின் ஸ்ரீமத் பாகவதத்தை பல தடவை படித்துச் சுவைத்தார். ஸ்ரீ கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகளை நேரில் கண்டார். தான் கண்ட அந்த லீலைகளை உடனே காவியமாக இயற்றினார். அது பக்திச் சுவை நிறைந்தது. அதை கொஞ்சம் நெகிழ்ந்து, பாடிக் கொண்டேயிருந்தார். அதுதான் “ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்” என்ற பக்திச் சுவையைப்பெருக்கும் ஓர் சிறந்த காவியம்.
இதில் மூன்று ஆச்வாஸங்கள் உள்ளன. முதல் ஆச்வாஸத்தில் 110 ஸ்லோகங்கள். இரண்டாம் ஆச்வாஸத்தில் 109 ஸ்லோகங்கள். மூன்றாம் ஆச்வாஸத்தில் 106 ஸ்லோகங்கள், ஆக மொத்தம் 325 ஸ்லோகங்கள். இந்த ஸ்லோகங்களை ரத்னங்களாகவே பக்தர்கள் போற்றுகின்றனர்.
இதில் யசோதை குழந்தையை பாலூட்டி, தாலாட்டி, தொட்டிலாட்டும் வர்ணணை ரமணீயமானது. தவழும் கிருஷ்ணன் நம் மனக்கண்ணை விட்டு அகலுவதேயில்லை. அவனுடைய நடை அழுகு, பிருந்தாவனத்தில் அவன் ஓடுவது, ஆடுவது எல்லாமே நமக்கு அவனிடம் அளவற்ற பக்தியையுண்டாக்குகிறது. கானலோலனான கோபாலனின் வேணுகான வர்ணனையும், கானத்தில் மயங்கும் பசு, பக்ஷிகளின் வர்ணனையும் மனதை மிகவும் கவருகின்றது. யசோதை அவனிடம் வைத்த அன்பும், அவனுடன் அவள் ஓடுவதும் கொஞ்சுவதுமான காட்சி ஓர் சிறந்த நாடகம் போல அமைந்துள்ளது. கோபிகள் கொஞ்சும் ரமணனைப் பற்றி லீலாசுகர் வர்ணிப்பது கிளி (சுகம்) கொஞ்சுவது போல் உள்ளது. கோபிகைகளின் வீட்டில் வெண்ணையை அபஹரிக்கும் கிருஷ்ணன் நம் மனதையும் அபஹரித்துக் கொள்கிறான். இதை சுவைத்துப் படிக்கும்போது நம் மனம் அவனிடமே லயித்துவிடுகிறது. இதில் சப்தாலங்காரமான ப்ராசங்கள் எல்லையற்றவை. ச்லேடையும் ஆங்காங்கு நிரம்பி காண்பது போலவே தோற்றம் உண்டாகிறது. யசோதையின் புத்ரவாத்ஸல்யமும், கண்ணனின் மாத்ரு பக்தியும் நம் மனதைவிட்டு அகலுவதே இல்லை. இதைப் படிக்கும் பக்தர்கள் பரம பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமேயில்லை.
இக்காவியத்தின் மங்கள ஸ்லோகம்:-
“சிந்தாமணி ஜயதி ஸோமகிரிர் குருர்மே
சிக்ஷா குருச்ச பகவான் சிகிபிஞ்ச மௌளி: I
யத்பாத கல்பதரு பல்லவ சேகரேஷு
லீலா ஸ்வயம் வர ரஸம் லபதே ஜயஸ்ரீ: II
கருத்து : சிந்தாமணி என்னும் ரத்னம்போல் ஸர்வாபீஷ்டங்களையும் வாரி வழங்கும் “ஸோமகிரி” என்ற என்னுடைய குரு எங்கும் பிரகாசிக்கின்றார் (விளங்குகின்றார்).
மயில் தோகையை தலையில் அணிந்தவரும், எல்லா கல்யாண குணங்களும் நிரம்பியவரும், என் மனதில் புகுந்து என்னை நல்வழிபடுத்தியவருமான புருஷோத்தமன் எங்கும் பிரகாசிக்கின்றார்.
அவருடைய கற்பகத்தருவின் தளிர் போன்ற பாதங்களை வணங்குபவர்களை ஜயஸ்ரீ விரும்பி தானாகவே அவர்களை அடைகிறாள்.
கடைசி ஸ்லோகம்:
“யார் ப்ரீதிர் விதுரார்பிதே முரரிபோ
குந்த்யர்பிதே யாத்ருசீ;
யா கோவர்தன மூர்த்தி யா சப்ருதுகே
ஸதன்யே யசோதார்பிதே I
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிகா
தத்தே தரே யோஷி தாம்
யாப்ரீதி: முனிபத்னி பக்தி ரசிதே
ப்யத்ராபி தாம் தாம் குரு II“
கருத்து: “கண்ணா! உனக்கு விதுரர் விருந்தில் எப்படிப்பட்ட அன்புள்ளதோ, குந்தி கொடுத்த உணவில் எப்படிப்பட்ட அன்புள்ளதோ, கோவர்த்தனகிரியில் கோபாலர் செய்த பூஜையில் எவ்வளவு இன்பம் ஏற்பட்டதோ, குசேலர் கொடுத்த அவலில் எந்த இன்பத்தை கண்டாயோ, யசோதை கொடுத்த பாலில் எந்த ஸந்தோஷத்தை அடைந்தாயோ, பரத்வாஜ முனிவரின் பூஜையை எவ்வளவு அன்புடன் ஏற்றுக்கொண்டாயோ, சபரி கொடுத்த பழங்களை எப்படி விரும்பி உண்டாயோ, கோபஸ்த்ரீகளின் அதாபானத்தில் எந்த இன்பம் பெற்றாயோ, முனிவர்களின் பத்னிகள் பக்தியுடன் அளித்த அன்னத்தில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாயோ, அவ்வளவு அன்பையும் சேர்த்துக் கூட்டி நான் செய்த இந்த பாமாலையினை வைத்து ஏற்றுக்கொண்டு என்னை உன் பாதாரவிந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று மிகுந்த வணக்கத்துடன் வேண்டுகிறார்.
கண்ணா! நீ அன்புக் கடல்! நீ கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பகம்! ஆகையால் உன்னை நான் வேண்டுகிறேன், “என்னிடமும் இதைப் படிக்கும் வாசகர்களிடமும் அன்பு கொண்டு எங்களுக்குப் பேரானந்தாம்ருதத்தைத் தரவேண்டும்”.
கோபாலரதனம் புவனை கரத்னம்
கோபாங்கனா யௌவன பாக்யரத்னம் I
ஸ்ரீ க்ருஷ்ணரத்னம் ஸுரஸேவ்யரத்னம்
பஜாமஹே யாதவ வம்சரத்ன்ம் II
இக்காவியம் பக்தி ப்ரதானமாய் இருந்தபோதிலும் ச்ருங்கார ரஸம் நிறைந்தவை.
ச்ருங்கார நாயகன் மன்மதன். அவனுக்கு “மதனன்” என்று ஓர் பெயர் உண்டு. அவன் கண்ணனின் குமாரன். ஆகையால் கண்ணனும் ச்ருங்கார நாயகன் தானே ! ஆதலால் கண்ணனை ஓர் ஸ்லோகத்தில் “மதனகோபாலனாக” எட்டு கைகளுடையவனாகவும், சிவப்பு நிறமுள்ளவனாகவும், மிகவும் அதிசயமான முறையில் வர்ணித்துள்ளார்.
கோதண்டமைக்ஷவமகண்டம் இக்ஷுஞ்ச பௌஷ்யம்
சக்ராப்ஜ பாச ஸ்ருணி காஞ்சன வம்சநாளம் I
பீப்ராண மஷ்டவீத பாஹுபீ ரர்கவர்ணம்
த்யாயேத் ஹரிம் மதனகோபால விலாஸ வேஷம் II
கரும்புவில்லையும், புஷ்ப பாணத்தையும், சங்கையும், சக்கரத்தையும், ஆறு புஜங்களில் தரித்து, மற்ற இரண்டு புஜங்களில் தங்கத்தால் நிர்மாணம் செய்யப்பட்ட “குழலையும்” வைத்துக் கொண்டு வேணுகானம் செய்கின்ற சிவந்த நிறமுடைய “மதன கோபாலனை” எல்லோரும் எப்பொழுதும் த்யானம் செய்யுங்கள். அதனால் பேரின்பம் அடையலாம் என்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணனை சிவப்பு நிறமாக வர்ணித்துதிருப்பது, எட்டு கைகள் என்று கூறியிருப்பது, கரும்புவில், புஷ்ப்பாணம், பாசம், அங்குசம் இவைகளைக் கைகளில் அணிந்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது இவையெல்லாம், பராசக்தியை வர்ணிப்பது போல் உள்ளதால் பராசக்தியே க்ருஷ்ணன் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
மேலும் மன்னார்குடியில் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமிக்கு ஓர் காதில் தாடங்கமும், ஓர் காதில் கடுக்கனும் அணிவித்திருக்கிறார்கள். அதோடு அவருக்கு ஒரு பக்கம் ஸ்த்ரீகளுக்கான ஆபரணமும், மற்றொரு பக்கம் ஆண்களுக்கான ஆபரணமாகவும் அலங்காரம் செய்கிறார்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேலன். ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு பெண்களுக்கான ஆபரணங்களை அணிவித்து அலங்காரம் செய்திருப்பதை நாம் ஒவ்வொரு வீடுகளிலுள்ள படங்களிலும் காண்கிறோம். ஆகையால் பராசக்தியே கண்ணனாக அவதரித்திருப்பதாகச் சிலர் சொல்லுவதற்கு இவை எல்லாம் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
கருணாமூர்த்தியான ஸ்ரீ தேவியும், கண்ணனும் நம் தாபத்தைப் போக்கி நமக்கு அருள்புரிய வேண்டுமென்று வேண்டுகிறேன்.